முகப்பு
ஸ்தல புராணம்
கோவில் புராணம்
ஊர் நிர்வாகம்
சமுதாய விரிவாக்கம்
பள்ளிகள்
பண்டிகைகள்
புகைப்படங்கள்
தொடர்பு கொள்ள
   
 
 
கோவில் புராணம்
 
ஸ்ரீ சிவசுப்ரமணியர் எழுந்தருளியுள்ள கற்பகிரக மண்டபத்தின் முன்பு, சிற்பக்கலை நயத்துடன் இரண்டு துவார பாலகர் சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்த இரண்டு சிலைகளும் புகழ் பெற்ற இரண்டு செங்குந்தப் பெருமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒன்று நமது ஊரைச் சேர்ந்த ஐயம் வீட்டுக்காரர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆறுமுக முதலியாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த சிலைக்கு விஜயந்தன் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொன்று காரியக்கார சித்த முதலியாரால் வழங்கப்பட்டது. இந்த சிலைக்கு ஜெயந்தன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நமது ஸ்ரீசிவசுப்ரமணியர் கோவிலின் முன்புறம் ஒரே கல்லால் ஆன தீபஸ்தம்பம் அமைந்துள்ளது.இதன் உயரம் சுமார் 15 மீட்டர் ஆகும். இந்த தீபஸ்தம்பத்தை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுள்ளனர்.கோவிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள செண்டா மரத்திலிருந்து நீண்ட சாரம் அமைந்து தீபஸ்தம்பத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

முருகக் கடவுளின் படைத் தளபதியாக விளங்கியவர் வீரபாகு, இவர்களின் வழித்தோன்றல் தான் செங்குந்த பெருமக்கள் என்று கூறப்படுகிறது. இறை பக்தியுடன் ஆன்மீகத்தில் முதன்மையாக விளங்கியவர்களும் செங்குந்த பெருமக்களே! நமது ஊர் செங்குந்த பெருமக்கள் 75 ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தைக் கட்டி முடித்து நான்கு முறை குடமுழுக்கு விழா நடத்தியுள்ளனர். அதாவது நமதுநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இக்கோவிலைக் கட்டி முடித்துவிட்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடும், உயர்ந்த விழாக்களும் நடைபெற்று வந்துள்ளது.

1935-ம் ஆண்டுக்கு முன்னரே ஸ்ரீதண்டாயுதபாணி சிலையை மூலவராக வைத்து இவ்வூரைச்சேர்ந்த சித்தநாத சுவாமிகள் என்பர் வழிபாடு நடத்தி வந்தார். அவருடன் இணைந்து பூசாரி சுப்ராயமுதலியார் அவர்களும் சிறப்பாக வழிபாடு நடத்தி வந்தார். 1935-ம் ஆண்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது. அது சமயம் மேற்படி சிலையை கோவிலில் நுழைவு வாயிலின் வலதுபுறம் நிறுவப்பட்டது. பின்னர் 1969-ம் ஆண்டு ஸ்ரீதண்டாயுதபாணி சிலையை எடுத்து நவகிரஹங்களுக்கு அருகில் நிலை நிறுத்தினர். மூலஸ்தானத்தின் வட புறம் நிறுவிய ஸ்ரீதண்டாயுதபாணிக்கு கோபுரம் கட்டி 20-04-1969ம் ஆண்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தினர்.

முருகக் கடவுளுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திர நாட்களில் முருகக் கடவுளை அலங்கரித்து ஊர்வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் சிவஸ்ரீ.V.M.குப்புசாமி குருக்களும்,சிவஸ்ரீ.M.சண்முக சுப்ரமண்ய குருக்களும் தேர்த்திருவிழாவை குருக்கள் ஸ்தானத்திலிருந்து நடத்தி வைப்பார்கள்.

தேர்திருவிழா காலத்தில் கொடியேற்றம் நடைபெற்று தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இத்தேரானது தாரணவருடம் வைகாசி மாதம் 22-ம் நாள் (05.06.1944) உருவாக்கபட்டது. உத்திரநட்சத்திரத்தன்று அதிகாலையில் ஸ்ரீசிவசுப்ரமணியருக்கும், வள்ளி , தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதுசமயம் சிறப்பு ஊஞ்சல் பாடல் நிகழ்ச்சியை பொம்மிவீட்டு வகையறாக்கள் பாடி வருகிறார்கள்.திருக்கல்யாணம் நடைபெற்ற பின் இரத உற்சவ வீதிஉலா துவங்கும்.இரண்டு நாள் தேர், திருவீதி உலா நடைபெற்ற பின் மூன்றாம் நாள் இரவு ஸ்ரீசிவசுப்ரமணியர் வள்ளி தெய்வானை சமேதரராய் சத்தாவரணம் நடைபெறும். அதுசமயம் சிறப்பாக வானவேடிக்கைகள் நடைபெறும்.

மதஒற்றுமையைப் பேணும் வண்ணம் இராசிபுரம் முகமதியர்களை அழைத்து,செண்டா மரத்தின் கீழ் அமர்ந்து சிறப்பிப்பர்.அது போது முகமதியர்களின் வெள்ளை நிறக் கொடியுடன் ஊர்வலம் வந்து, செண்டா மரத்தின் உச்சியில் வெள்ளைக் கொடியை ஏற்றுவர்.

செங்குந்த பெருமக்களும், ஆன்மீகப் பெருமக்களும் அளித்த பெருநிதி உதவியுடன் ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்திற்கு உயர்ந்த ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே 24.02.1975-ம் ஆண்டு திங்கள்கிழமை அப்போதைய பெரியதனக்காரர் பச்சி.பழனியப்ப முதலியார் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.பொதுநலத் தொண்டில் சிறந்து விளங்கிய திரு.T.M.காளியண்ணன்MA,B.COM அவர்களும்,தொழில் அதிபர் J.K.K.நடராஜா அவர்களும் வருகை புரிந்து அடிக்கல் நாட்டி சிறப்பித்தனர். இரண்டு ஆண்டுகள் விடா முயற்சியால் 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ம் நாள் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.அப்போதைய பெரியதனக்காரர் மேற்கத்தி.M.K.காளியப்ப முதலியார் தலைமையில் குடமுழுக்கு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.அதுபோழ்து திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் வருகை புரிந்து விழாவைச்சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

நமது வட்டாரத்திலேயே இது போன்ற சுமார் 200 மீட்டர் உயரமுள்ள கோபுரம் வேறெங்கும் இல்லை என்று கூறும் அளவிற்கு நமது இராஜகோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கோயிலின் நித்திய பூஜைகளையும், சிறப்பு பூஜைகளையும் சிவஸ்ரீ.பழனிசாமி குருக்கள் நடத்தி வருகிறார்.

இராஜகோபுரம் வழியே ஆலயத்திற்குள் செல்லும் போது உயர்ந்த நடை(கதவு) காணப்படு கிறது.சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக் கதவு,சிகப்பு நூல் S.துரைசாமி சகோதரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.மேலும் உட்பிரகாரத்திற்குள் செல்லும்போது வலது புறமாக முதலில் காட்சியளிப்பது சாந்தமுகத்துடன் அருள் பாலிக்கும் காமாட்சியம்மன் தான்.அடுத்து ஏகாம்பரேஸ்வரர் அருள் காட்சியளித்து அனைவரையும் காப்பாற்றி வருகிறார்.அதற்கு எதிர்புறம் நந்திதேவர் காட்சியளிக்கிறார்.இவர்களை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் ஸ்ரீவல்லப கணபதி அருள் காட்சியளித்து அனைவரையும் பாதுகாக்கின்றார்.

ஸ்ரீவல்லப கணபதியை வழிபட்டபின்னர் கோயிலை வலம் வரும் போது நவகிரகங்கள் அமைந்துள்ள இடத்தை அடைகிறோம்.நவகிரகங்களை வணங்கிய பின்னர் அங்கு தனியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு பின்னர் வலப்புறம் வந்தால் ஸ்ரீதண்டாயுதபாணி நின்ற கோலத்தில் காட்சியளித்து அனைவருக்கும் அருள்பாளிக்கிறார்.இவரது முன்புறம் மயில் வாகனம் சிறப்பாக அமைந்துள்ளது.அவரை மனம் ஒன்றிவழிபட வேண்டும்.

அதன்பிறகு வடதிசை நோக்கியுள்ள துர்க்கை அம்மனை வணங்கிவிட்டு,அடுத்த படியாக படைப்புக் கடவுளான பிரம்மாவையும், எதிர்புறமுள்ள சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். அதன்பிறகு தொடர்ந்து செல்லும்போது,கிழக்கு திசை நோக்கியுள்ள லிங்கோத்பவரை தரிசனம் செய்யலாம்.தொடர்ந்து வலம் வரும்போது கல்லால மரத்தின்கீழ் அமர்ந்துள்ள தென்முகக் கடவுளான குரு என்று சொல்லப்படும் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.பின்னர் அதன் அருகில் உள்ள நடன கணபதியை வணங்கலாம்.இவ்வாறு ஆலயத்தை வலம்வந்த பிறகு மகா மண்டபத்தை அடையவேண்டும்.அதன் பிறகு ஜெயந்தன் ,விஜயந்தன் என்னும் இரண்டு வாயில் காப்பாளர்களான துவாரபாலரை வணங்கி அர்த்த மண்பத்தின் உள்ளே சென்றால் அழகே வடிவாய், நின்ற கோலத்தில் காட்சித் தரும் ஸ்ரீசிவசுப்ரமணியரின் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம். தன்னை நாடி வந்தவர்க்கு வரத்தை ஓடோடி வந்து அருள் பாலித்துக் கொண்டு விளங்கும் ஈசனின் இளைய மைந்தனாகிய ஸ்ரீசிவசுப்ரமணியக் கடவுளை வணங்கி ,நாம் அருள் பெற்று பதினாறு வகை செல்வங்களான கலையாத கல்வியும், குறையாதசெல்வமும், கபடுவராதநட்பும், கன்றாதவளைமையும், குன்றாத இளைமையும், பிணி இல்லாத உடலும், சவிலியாதமனமும், அன்புஅகலாத மனைவியும்,தவறாதசந்தானமும் ,உயந்த புகழும் ,மாறாத வார்த்தையும்,தடையில்லாத கொடையும் ,தொலையாதநிதியமும்,கோணாத கோலும், துன்பமில்லாத வாழ்வும், இறையன்பும் பெற்று நீடூழி வாழலாம்.
 
 
 
     
 
Copyright © 2011 Sri Siva Subramaniya Temple, Gurusai , All rights reserved This site designed and maintained by Kathir