முகப்பு
ஸ்தல புராணம்
கோவில் புராணம்
ஊர் நிர்வாகம்
சமுதாய விரிவாக்கம்
பள்ளிகள்
பண்டிகைகள்
புகைப்படங்கள்
தொடர்பு கொள்ள
   
 
 
கல்வி கண் கொடுத்த செங்குந்தர் மஹாஜன பள்ளிகள்
 
முக்கனிகளில் முதன்மை பெற்று விளங்குவது மாங்கனி. மாங்கனி நகர் என்று போற்றப்படுவது சேலம் மாநகர். அத்தகைய சேலம் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் அமைந்திருந்தது தான் நமது ஊரான குருசாமிபாளையம்.1996-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து நாமக்கல் மாவட்டம் உதயமானது. அது சமயம் நமது ஊர் நாமக்கல் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. நெய்க்கு பெயர் பெற்றது ராசிபுரம். இராசிபுரம் வட்டத்தில் நெய்தல் தொழிலுக்குப் பெயர் பெற்றது குருசாமிபாளையம். இங்கு வாழும் செங்குந்தப் பெருமக்கள் கல்வியைக் கண் போலக் கருதினர். எனவே ஆதி காலத்தில் நமது ஊரில் குருகுலப் பள்ளிகள் மூன்று இயங்கி வந்தன. சேலத்தார் என்று அழைக்கப்படும் திரு கிருஷ்ணமுதலியார் அவர்கள் முயற்சியால் அந்த மூன்று குருகுலப்பள்ளிகளும் ஒன்றாக இணைந்தன. அவ்வாறு இணைக்கப்பட்டப் பள்ளியின் பெயர் தான் ஸ்ரீ கிருஷ்ணவிலாஸ் உயர்தர ஆரம்ப பாடசாலையாகும். இப்பள்ளியில் ஜம்பை திரு. மா. அர்த்தனாரி முதலியார் அவர்கள் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இப்பள்ளி திருமதி. அலமேலு அம்மாள் அவர்களது மேற்பார்வையில் அமைந்தது. அந்த அம்மையார் அப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி செம்மையாக செயல் பட்டு வந்தார்.

1951-ம் ஆண்டு வரை இராசிபுரம் அரசினர் உயர் நிலைப் பள்ளியைத் தவிர இந்த வட்டாரத்தில் உயர்நிலைப் பள்ளியே இல்லை. ஆகவே நமது ஊரைச் சேர்ந்த மாணவர்கள் இராசிபுரம் சென்று தான் உயர்நிலைக் கல்வி கற்று வந்தனர். அவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையை மாற்ற பொது நலம் படைத்த நல்ல உள்ளம் கொண்ட செங்குந்த சமுதாயப் பெரியவர்கள் ஒன்று கூடி நமது ஊரில் உயர்நிலைப்பள்ளி ஏற்படுத்த வேண்டும் என்றும் நமது சமுதாய மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றும் எண்ணினர். அவர்கள் நல்ல எண்ணத்துடன் ஒன்று பட்டு உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்கள்.இது குருசாமிபாளையம் செங்குந்த பெருமக்கள் செய்த புண்ணியம் என்று சொன்னால் மிகையாகாது.

முதன் முதலாக கீழ்க்கண்டவர்களைக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழுவை செங்குந்த பெருமக்களின் சமுதாயத்தால் நிறுவப்பட்டது.

1.திரு.ஜி.ஏ.செங்கோட முதலியார் அவர்கள், தலைவர்.
2.திரு.எம்.கே.காளியப்ப முதலியார் அவர்கள்,செயலாளர்.
3.திரு.ஏ.எஸ்.அருணாசல முதலியார் அவர்கள்,துணைத் தலைவர்.
4.திரு.எஸ்.மாரிமுத்து அவர்கள்,உறுப்பினர்.
5.திரு.யு.ஏ.சுப்பராய முதலியார், அவர்கள் உறுப்பினர்.
6.திரு.கே.எஸ்.மாரிமுத்து முதலியார் ,அவர்கள் உறுப்பினர்.
7.திரு.டி.கே.அருணாசலம் அவர்கள்,உறுப்பினர்
8.திருமதி.அலமேலம்மாள் அவர்கள்,உறுப்பினர்
9.திரு.கே.என்.பழனியப்ப முதலியார் அவர்கள்,உறுப்பினர்
10.திரு.என்.வெள்ளைய முதலியார் அவர்கள்,உறுப்பினர்

பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகக் குழு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பள்ளித் துவக்கம்

 02.07.1951-ம் நாள் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சிவசங்கரன் அவர்கள் தலைமையில்,சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.வி.ஏ.மரியசூசை அவர்களால் முதல் படிவத்திலிருந்து நான்காம் படிவம் வரையுள்ள பள்ளியாகத் தொடங்கி வைக்கப்பட்டது.பின்னர் 1953-1954-ம் ஆண்டு முதன்முறையாக ஆறாம் படிவத்துடன் முழுமையான உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நமது பள்ளி வளர்ந்து 01.07.1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

செங்குந்தர் மகாஜன மகளிர் உயர்நிலைப் பள்ளி.
நமது பள்ளியில் 1988-1989-ம் ஆண்டில் 1800 மாணவ-மாணவியர் கல்வி பயின்றனர். மகளிர் கல்வி சிறப்பாகஅமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இதே நிர்வாகத்தின் கீழ் செங்குந்தர் மகாஜன மகளிர் உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 1989-90-ம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கெண்டி. A.அர்த்தனாரி அவர்கள் முயற்சியால் மகளிர் பள்ளி உருவானது. இப்பள்ளிக்கு சுமார் ரூ. 26 இலட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 13-11-1999 அன்று தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1150- மாணவ மாணவியரும், மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 650 மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர்.
செங்குந்த மகாஜன உதவி பெறும் துவக்கப்பள்ளி
1994-ம் ஆண்டு வரை நமது ஊரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணவிலாஸ் துவக்கப்பள்ளியை, திருமதி அலமேலு அம்மாள் (ஐயர் வீட்டு அம்மாள்) அவர்களிடமிருந்து பெற்று இதே நிர்வாகம் செங்குந்தர் மகாஜன உதவிபெறும் துவக்கப்பள்ளி என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது மேல்நிலைப் பள்ளியில் 39 ஆசிரியர்களும், 6 அலுவலக பணியாளர்களும், பணிபுரிகின்றனர். மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 12 ஆசிரியைகளும், 2 அலுவலகப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர். துவக்கப் பள்ளியில் 15 ஆசிரியர்களும் பணியாற்றி கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளியில் தொழிற்கல்வியின் முலம் பயன் பெற்றவர்கள்
மேல்நிலைப் பள்ளியில் 1985-86-ம் ஆண்டு முதல் 1989-90-ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகள் மேல்நிலைக் கல்வியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற மாணவிகள் இன்று பல்வேறு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியைகளாகவும்,தலைமை ஆசிரியைகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல் கல்பதித்தது போல் ஆகும் என்று கூறினால் மிகையாகாது.

பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்கள்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும்/ அறிவியல் அறிஞர்களாகவும்,கணிப்பொறி வல்லுனர்களாகவும்,நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.அரசுஅலுவலர்களாகவும்,ஆசிரியர்களாகவும் பலர் பணியாற்றி வருகின்றனர். காவல் துறை ஐ.ஜி.திரு.ஆ.பழனிவேல் அவர்களும்,காவல் துறை டி.ஐ.ஜி,திரு.குமாரசாமி அவர்களும்,ஐ.ஆர்.எஸ்.அதிகாரியான சரவணக்குமார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாணவ-மாணவிகள் சாதனை:
1996-1997-ம் கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் இப்பள்ளி மாணவி ரம்யா என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார்.1997-1998-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் இடத்தை என்.சிவராஜசேகர் என்ற மாணவரும்,மூன்றாம் இடத்தை.எஸ்.ஜெகதீஸ் என்ற மாணவரும்,நான்காம் இடத்தை பச்சியப்பன் என்ற மாணவரும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மகளிர் பள்ளியில் 2001-2002-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை ஈ.நர்மதா என்ற மாணவி பெற்று சாதனை படைத்தார்.மேலும் 2002-2003-ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை ஜ.கீர்த்தனா என்ற மாணவி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முன்னாள் மாணவ மன்றம்

நமது பள்ளியில் முன்னாள் மாணவ மன்றம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளியின் பொன்விழா 2001-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.இதையொட்டி பள்ளியின் முன்னாள் மாணவர்மன்றம் சார்பாக ஒரு பொன்விழா கட்டிடம் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்கள் அன்பளிப்பாக அளித்த நன்கொடையில் சுமார் 10.50லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது.அக்கட்டிடம் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டில் அமைந்துள்ளது.

1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளி நிர்வாகக் குழுவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை,செங்குந்தர் பெருமக்களால் மாறுதல் செய்யப்பட்டு வருவது வழக்கம்.
அந்த முறையில் தற்போது 16-10-2007-ம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் குழுவாகக் கொண்டு நமது பள்ளி செயல்பட்டு வருகிறது.

1. திரு. மா . சண்முகம் அவர்கள் - தலைவர்.
2. திரு. அ. பழனிச்சாமி அவர்கள் - துணைத்தலைவர்.
3. திரு. மு. வடிவேல் அவர்கள் - செயலாளர்.
4. திரு. ஆ. பழனிசாமி அவர்கள் - பொருளாளர்.
5. திரு. கா. விஸ்வநாதன் அவர்கள் - உறுப்பினர்.
6. திரு. சௌ. ஞானசேகரன் அவர்கள் - உறுப்பினர்.
7. திரு. செ. லோகநாதன் அவர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி.

16-10-2007-ம் ஆண்டு பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகக் குழுவானது மிகுந்த முயற்சி எடுத்து பழுதான கட்டிடங்களையும், சேதமடையும் நிலையில் இருந்த கட்டிடங்களையும் எடுத்து விட்டு புதியதாகக் கட்டிடம் கட்ட தீர்மனித்தது. மேலும் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. சுமார் 30 இலட்சம் மதிப்பில் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய மாடிக்கட்டிடம் கட்ட எண்ணி, மாவட்ட ஆட்சித் தலைவரை அனுகி 50% மானியத்துடன் ரூ. 17 இலட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. மேலும் சேலம் ரோட்டரி சங்கத்தின் மானியத்தில் ரூ, 2 இலட்சம் மானியம் பெற்று மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு 100 பெஞ்ச், டெஸ்க்கும் வாங்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.50 இலட்சம் மானியம் பெற்று 12 அறைகளைக் கொண்ட நவீன கழிப்பிடமும் கட்டப்பட்டது. மேலும் இரண்டு பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

சாதனைகள் பல படைத்தாலும் இப்பள்ளி பல சவால்களையும் எதிர்நோக்கி உள்ளது. பெருகி வரும் ஆங்கில வழி பள்ளிகளைக் கருத்தில் கொண்டு, நம் பள்ளியில் 6- மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிப்பாடம் துவக்கப்பட்டுள்ளது. 2008- ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் நம்பள்ளி கார்த்தி என்ற மாணவன் அரசியல் அறிவியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது ,பள்ளி வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்க வேண்டிய ஒன்றாகும். இதுபோல இன்னும் பல சாதனைகளைப் படைத்து நமது பள்ளியானதுமாவட்டத்திலும்,மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் பெயர் பெற பள்ளி நிர்வாகமும்,ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளனர். செங்குந்தர் சமுதாய மக்களும் சுற்று வட்டாரப் பொது மக்களும், நல்லாதரவு வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.

 
 
     
 
Copyright © 2011 Sri Siva Subramaniya Temple, Gurusai , All rights reserved This site designed and maintained by Kathir